தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மனித குடியேற்ற திட்டமிடல் மற்றும் பயிற்சி பிரிவு அனர்த்த ஆபத்துள்ள பகுதிகளில் குடியேற்றங்கள் தொடர்பான சமூக பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குடியேற்ற திட்டமிடல் பிரிவு குறைந்த வருமானம் பெறும் மக்களின் குடியேற்றங்கள் தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கல், சமூக-சுற்றாடல் பாதிப்பு மதிப்பீடு, உள்ளூர் ஆளுகையில் அனர்த்த இடர்க்குறைப்பு, அனர்த்த தாங்குதிறனுள்ள வீட்டு நிர்மாணம், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் மீள் குடியேற்றம் மற்றும் புனரமைப்பு, பல்லனர்த்த தேசப்படமாக்கும் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் மூலமான தேசப்படமாக்கல், காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள், வெள்ளம் தொடர்பான ஆய்வுகள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டங்கள் ஆகிய சேவைகளை வழங்கிவருகின்றது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்களும் மனித குடியேற்ற திட்டமிடல் மற்றும் பயிற்சி பிரிவின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளாக இனம்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கான மண்சரிவு அனர்த்த இடர் விபரக்குறிப்பு (Landslide Risk Profile) தயாரிக்கும் நடவடிக்கையும் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் மண்சரிவு இடர் முகாமைத்துவத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குள் உள்வாங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தேசப்படங்கள் தயாரிப்பு, இலத்திரனியல் மேற்பரப்பு ஒப்புரு (Digital Surface Modeling), இலத்திரனியல் தரைத்தோற்ற ஒப்புரு (Digital Terrain Modelling), சமவுயரக்கோடுகளை உருவாக்கல் மற்றும் மண்சரிவு மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கு ஆளில்லா விமானங்கள் (Drone) பயன்படுத்தப்படுகின்றது. இந்ததொழில்நுட்பம் பாதுகாப்பானதும் விளைதிறன் மிகுந்ததுமாகும். மேலும் மிக துல்லியமான தகவல்களையும் இந்த தொழில்நுட்பம் வழங்குவதுடன் அவை அனர்த்த இடர்க்குறைப்பு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் உதவுகிறது.

2016ஆம் ஆண்டு மே மாதம் கேகாலை மாவட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் இடம்பெயர்ந்த சுமார் 2000 குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனை இப்பிரிவினால் வழங்கப்படுகிறது.

மனித குடியேற்ற திட்டமிடல் மற்றும் பயிற்சி பிரிவு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான செயற்த்திட்டங்களை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. 2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மனித குடியேற்ற திட்டமிடல் மற்றும் பயிற்சி பிரிவின் காலநிலை ஆய்வு பிரிவு (Climate Research Unit) அமெரிக்காவின் வண்டபில்ட் சக்தி மற்றும் சூழலுக்கான நிறுவனத்துடன் இணைந்து உலர்வலய விவசாயிகளுக்கான காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கள் மற்றும் அவற்றுக்கான ஒருங்கிசைவு தொடர்பிலான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகின்றது.